சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்என்ரவி ஆய்வு மேற்கொண்டு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 28) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.