கோயம்புத்தூர்: சூலூர் இந்திய விமானப்படை தளத்தில் "தரங் சக்தி 2024" என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. இரு கட்டங்களாக இந்த பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.
இந்த பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகள் பங்கேற்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சியானது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தரங் சக்தி பன்னாட்டு கூட்டு விமானப் போர் பயிற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் விமானப் படை வளாகத்தில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று (செவ்வாய்கிழமை) துவங்கியது.
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி இந்த கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.