சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘ஸ்ரீராமரும் தமிழகமும் இணைப்பிரியா பந்தம்’ என்ற நூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இதில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ஹண்டே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஜெய் ஸ்ரீ ராம். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நாடே ராமரின் பக்தியில் மூழ்கி இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ராமர் வடமாநிலக் கடவுள். தமிழ்நாடு மக்களுக்கு தெரியாது என்ற கருத்தை கட்டமைத்தனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்களால் இளைஞர்கள் நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை இழந்துள்ளனர். ஜோடிக்கப்படும் கருத்துக்களால் நமது கலாச்சாரம் இனப்படுகொலை செய்யப்படுகிறது.
ராமர் எங்கும் உள்ளவர். அவரது தடங்கல் தமிழ்நாட்டில் உள்ளது. அனைவரது மனதிலும் ராமர் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான போது, சோழர்கள் தான் பொதுவாக பேசப்பட்டனர். அப்போது சிவன் நமது கடவுள், இந்திய அளவிலான கடவுள் அல்ல. ஏனென்றால் சோழர்கள் சிவனை வழிபட்டுள்ளனர் என பேசப்பட்டது.
இரண்டாவதாக, படம் வெளியான கொஞ்ச நாளில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதிகளவிலான மக்கள் வரவேற்பின் காரணமாக, அதிக மக்கள் கலந்துகொள்ள விண்ணப்பித்தனர். காசிக்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பு குறித்து பேசப்பட்டது.
மூன்றாவதாக, சனதானத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். சனாதனத்தை டெங்கு, மலேரியா என பேசினர். அதன் பிறகு என்னமோ நடந்தது. திடீரென அமைதியாகி விட்டனர். சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திவிட்டனர்.
இதையும் படிங்க:“தமிழகத்தில் பி.எச்டி தரம் திருப்திகரமாக இல்லை”.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும், நாட்டின் ஒவ்வொரு இன்ச்சிலும் ராமர் இருக்கிறார். பழங்காலத்தில் ராமரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் கோயிலில் வாழவில்லை. மக்களின் மனதிலும், நினைவிலும் வாழ்ந்து வருகிறார். ராமரை நீக்க முடியாது. ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது, நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் உள்ளார்.
நாடு முழுவதும் ராமர் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் கதை சொல்வதற்கு ஏற்ப சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால், ராமர் நாடு முழுவதிலும் இருந்திருக்கிறார். தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் போது, பாரத் என்ற வார்த்தை இல்லாததால் பலர் அதை ஏற்கவில்லை. மதச்சார்பின்மை என்ற வார்த்தையைக் கூட ஏற்கவில்லை. ஏனெனில், அது ஐரோப்பிய கலாச்சாரம். தேவாலயங்களுக்கும், ஆட்சியருக்கும் இடையே இருந்த முரணால் உருவானது மதச்சார்பின்மை. ஆனால், பாரதம் என்பது தர்ம நாடு, தர்மத்தை நீக்கினால் பாரதம் இல்லை. சனதான தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மற்றவர்கள் என்பதே சனாதனத்தில் இல்லை.
ராமரை நீக்கினால் பாரதம் எனும் இந்த நாடு இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது உலகின் 6வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருந்தது. 2014-இல் புதிய மத்திய அரசு அமையும் போது, இந்தியா 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நாடு ஏழ்மையாக மாறியது. எல்லோரும் சண்டை போட்டு வந்தனர். நமது நாட்டிற்காக நம் அனைவருக்கும் முன் மிகப்பெரிய பணி உள்ளது. முழுவதுமாக வளர்ந்த நாடாக, பொருளாதாரத்திலும் ஆன்மிகத்திலும் வளமான நாடக மாற்ற வேண்டும். உலகின் நன்மைக்காக நாம் உறுதியான நாடாக மாற வேண்டும்” என்றார்.