மயிலாடுதுறை: சென்னை கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் கடந்த 6 ஆம் தேதி 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில், பாரம்பரிய தற்காப்பு கலை ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறந்த தற்காப்பு கலை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் 250 தற்காப்புக் கலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை ஆளுநர் ஆ.என்.ரவி வழங்கி கௌரவித்தார். இதில், தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும், தற்காப்பு கலை ஆசிரியர் விநாயகம்(41) தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்.
இந்நிலையில், விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய விநாயகத்திற்கு, அவரிடம் தற்காப்புக் கலை பயின்ற மாணவர்கள் சால்வை அணிவித்து, இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து, தற்காப்புக்கலை பயிற்றுநர் விநாயகம் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். இதில், பல கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.