ராணிப்பேட்டை: சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், நேற்று ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், இன்று மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் உட்பட இரண்டு இடங்களில், நேற்று (பிப்ரவரி 03) முகமுடி அணிந்து வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதில், சந்தேகத்தின் பேரில் சென்னையில் பதுங்கியிருந்த மூவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
மேலும், இதில் சிப்காட் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழரசன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில், காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவர் சென்னையில் பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று (பிப்ரவரி 03) சென்னை சென்று மூவரையும் கைது செய்துள்ளனர். இதில், தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்ற ஹரி என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜிபே-வில் பணம் பறித்து காதலிக்கு அனுப்பிய இளைஞர்... வடமாநிலத்தவர்களை தாக்கி துன்புறுத்திய 5 பேர் கைது!
இந்த தாக்குதலில் காயமடைந்த காவல் துணை ஆய்வாளர் முத்தீஸ்வரன் மற்றும் தாக்குதல் நடத்திய ஹரி ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்துள்ளனர். அங்கு ஹரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 04) சிப்காட் காமராஜர் நகரைச் சேர்ந்த பரத்(20) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீச்சர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.