சேலம்:தமிழ்நாடு அளவில் கச்சத்தீவு விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கச்சத்தீவுக்கு மாற்றாக மன்னார் வளைகுடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் கடல் நிலப்பரப்பை இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது, எனவும், அதை பயன்படுத்தி பல லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் செந்தில் இன்று (ஏப்.02) விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை சென்ற மார்ச்.31 ம் தேதி வெளியிட்டார். அதில், 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது எனவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்.01) கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கச்சத்தீவை தங்களுக்கு வழங்க வேண்டும் என 1948 முதல் இலங்கை அரசு இந்தியாவிற்கு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டது. கச்சத்தீவு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கருணாநிதி அப்போது நான் பெயருக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், கச்சத்தீவு தொடர்பாகப் பெரிய போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கச்சத்தீவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்திருக்காது", என்று தெரிவித்திருந்தார்.
மேலும் கட்சி தீவை மீட்பது பாரதிய ஜனதாவின் குறிக்கோள் எனவும் அவர் உறுதிபட கூறி இருந்தார். இந்த நிலையில் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பி.வி.செந்தில், இன்று (ஏப்.02) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்திய, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும், அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 1974 ம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார்.