சென்னை:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சட்டப்பேரவையில் நடைபெற்ற இரங்கல் தீர்மான கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கடைமையை தவறி இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு தமிழக சட்டமன்றத்தில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, "முன்னாள் பிரதமர் மனமோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாமல் தனது கடமையை தவறிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உதவியால் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை கொடுத்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு உதவியாக இருந்தவர் . சேது சமுத்திரம் திட்டத்திற்கு ஏராளமான நிதி கொடுத்தவர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக பாலம் மற்றும் சாலைகள் முறையாக செயல்படுவதற்கு காரணமாக இருந்ததுடன், இந்தியாவை பொருளாதாரத்தில் மேன்மை அடையச் செய்தவர். அவர் மிகப்பெரிய மாமேதை.
மன்மோகன் சிங் இரங்கல் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வந்திருக்க வேண்டும்." என்று செல்வப்பெருந்தகை கூறினார்.