தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளவங்கோடு தொகுதி எங்களுடையது.. செல்வப்பெருந்தகை பேச்சு! - திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை

Selvaperunthagai: தமிழக முதல்வர், காங்கிரஸை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார், விரைவில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை பேச்சு
தமிழக முதல்வர் காங்கிரசை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:43 PM IST

Updated : Mar 6, 2024, 10:51 PM IST

விளவங்கோடு தொகுதி எங்களுடையது

புதுக்கோட்டை:மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு கார் மூலமாக சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, புதுக்கோட்டை கருவேப்பிளான் ரயில்வே கேட் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (மார்ச் 6) வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் அவரை வரவேற்று சால்வை அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “பாஜகவின் மிகப்பெரிய ஊழல் வெளிவர உள்ளது. உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், பாரதிய ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம், தேர்தல் பத்திர விளக்கங்களை உடனடியாக கொடுக்காமல் கால அவகாசம் கேட்கின்றனர். அவர்கள் எதற்காக கால அவகாசம் கேட்கிறார்கள்? வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை எப்படி தங்களது கைகளில் வைத்துக்கொண்டு உள்ளனரோ, அதேபோன்று வங்கியையும் தற்போது தங்களது கட்டுப்பாட்டிற்குள் பாஜகவினர் கொண்டு வந்துள்ளனர்.

எதற்காக கால அவகாசம் கேட்கின்றனர், இந்த விவகாரம் வெளியே வந்தால் மிகப்பெரிய ஊழல் வெளியே வரும். அதோடு இல்லாமல், இந்தியாவிற்கு அச்சுறுத்தும் நாடுகளில் இருந்து கூட பணம் வந்துள்ளது என கூறப்படுகிறது. உண்மை இருந்தால், ஊழல் நடக்காமல் இருந்தால் நிதி அமைச்சரிடம் கூறி இந்த விவகாரங்களை வெளியிட வேண்டும்.

இந்தியாவிற்கு போதைப்பொருள் வரும் துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அங்கிருந்து தமிழகத்திற்கு இந்த போதைப்பொருளை அனுப்புவது யார், இதுகுறித்து வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாஜக ஆட்சியில் எவ்வளவு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது, எவ்வளவு பிடிபட்டுள்ளது என்பது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள பாசிச சக்திகளை விரட்ட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. எல்லா மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை முடிந்து, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. அதே போன்று, தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

தொடர்ந்து, திமுக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் காங்கிரஸ் கட்சி பிடி கொடுக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் அதுபோன்று எதுவும் கூறவில்லை, விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தமிழகத்தில் மனசாட்சியோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தமிழக முதல்வர். அவர் காங்கிரசின் மனசாட்சியாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஒருபோதும் காங்கிரசை அவர் குறைத்து மதிப்பிட மாட்டார். விளவங்கோடு எங்களுடைய தொகுதி, அதில் மாற்று கருத்து கிடையாது, நாங்கள் போட்டியிடுவோம்” என கூறினார்.

காங்கிரசிற்கு திமுக ஏழு அல்லது எட்டு இடங்கள் மட்டும் கொடுப்பதாக கூறியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “அப்படியெல்லாம் கிடையாது. எங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள். சமீபத்தில் நிகழ்ந்த வெள்ளத்திற்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை. நம்முடைய நிதியை எடுத்து எங்கெங்கு பாஜக ஆள்கிறதோ, அந்தந்த மாநிலத்திற்கு கொடுக்கின்றனர். வாக்கு சேகரிப்பதற்காக பொய் பித்தலாட்டம் செய்கிறார், பிரதமர் மோடி. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற தலைமையாகத்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது” என கூறினார்.

ஏற்கனவே எம்பியாக இருப்பவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளேயே போர்க்கொடி தூக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இது குறித்து தலைமை முடிவு செய்யும்” என்றார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக பிரமுகர் சம்பந்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “உண்மையாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும், பாஜக மாதிரி நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை” என்றார்.

இதையும் படிங்க: பாஜகவிடம் உள்ள ‘அற்புத வாஷிங் மிஷின்’ .. ஸ்டாலின் கூறுவது என்ன?

Last Updated : Mar 6, 2024, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details