சென்னை: சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8.57 கோடி ) வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம், எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கி வைத்துள்ளார்.
இதில், சிந்துவெளி வரிவடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும் - ஒரு வடிவவியல் ஆய்வு நூலினை வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மேடையில் முதலமைச்சர் பேசியதாவது, “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் வெளியிட்ட 3 அறிவிப்புகள்:
சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.