தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருகின்ற தேர்தலில்.. மதுரை அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன? - MK STALIN MADURAI VISIT

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என்று மதுரை அரிட்டாபட்டியில கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை அரிட்டாபட்டி கிராம மக்கள் முன் பேசும் முதல்வர் ஸ்டாலின்
மதுரை அரிட்டாபட்டி கிராம மக்கள் முன் பேசும் முதல்வர் ஸ்டாலின் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 10:46 PM IST

Updated : Jan 27, 2025, 7:46 PM IST

மதுரை:மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கான, ஏல உரிமையை ரத்து வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த 23 ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் நேற்று (25.1.2024), தலைமைச் செயலகத்தில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் – அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம் பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த ஊர் பிரமுகர்கள் தமிழக முதல்வரை சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இனறு (26.1.2025) குடியரசு நாள் விழா முடிவுற்ற பின்னர் தமிழக முதல்வர் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மதுரையிலிருந்து அரிட்டாபட்டிக்கு சாலை மார்க்கமாக சென்ற முதல்வர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் அரிட்டாப்பட்டியில் முதல்வரை வரவேற்க காத்திருந்த தம்பதியர் ஒருவரின் ஆண் குழந்தைக்கு 'வெற்றி' என்றும், மற்றொரு தம்பதியரின் பெண் குழந்தைக்கு 'திராவிட செல்வி' எனவும் அவர் பெயர் சூட்டினார்.

அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, வரவேற்பு அளித்தனர். அதன்பின் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும் பேசி, அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அது இன்றைக்கு நாம் நினைத்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது.

அந்த தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்த நேரத்தில் நான் தெளிவாக சொன்னேன். மக்களால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய நான் இந்த முதலமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற வரைக்கும் நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது. அதைப்பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அப்படி ஒருவேளை இத்திட்டம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் பதவியில் இருக்கமாட்டேன் என்றும் கூறினேன்.

ஆனால், அதற்காக நேற்றைக்கு என்னை சந்தித்த இந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் பாராட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும். எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அழைத்தார்கள். உள்ளபடியே எனக்கு பாராட்டு சொல்வதைவிட, நன்றி சொல்வதைவிட உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்; உங்களுக்குத்தான் பாராட்டு சொல்லவேண்டும்.

நான், உங்கள் என்று பிரித்து பேச விரும்பவில்லை. நாம், நமக்கு இதில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதுதான் உண்மை. ஆகவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே உறுதி சொல்கிறேன்.

இன்னும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வரயிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியும். அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, வள்ளாலபட்டி கிராமத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கிராம முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். வள்ளாலபட்டி கிராம மக்கள் முன்பு முதலமைச்சர் உரையாற்றியபோது, "மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் ஒன்றிய அரசு செயல்படுத்த நினைத்தால் அதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி, மக்களின் நலனைக் காக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், எம். பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated : Jan 27, 2025, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details