தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யுஜிசி வரைவறிக்கைக்கு எதிராக சபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம்: ஆதரவு, எதிர்ப்பாக ஒலித்த குரல்கள்! - TN ASSEMBLY SESSION TODAY

யுஜிசியின் புதிய திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இத்தீர்மானத்தை பாஜக எதிர்த்த நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைமைச் செயலகம், சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை
தலைமைச் செயலகம், சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 17 hours ago

சென்னை:பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இத்தீர்மானத்தை பாஜக எதிர்த்த நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் அவையில் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு:

உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் (திமுக):புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக உயர்க்கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை பாதிக்கும் வகையில் யுஜிசி திருத்த வரைவு அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் சார்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஏற்கெனவே உள்ள 3 பேர் கொண்ட குழுவில் நான்காவது ஒருவரை கொண்டுவர நினைப்பதை ஏற்க முடியாது.

அக்னி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக):யுஜிசி வரைவறிக்கையில், துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசு பிரதிநிதிகளை நீக்குவது, கற்பித்தலில் அனுபவம் இல்லாதவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கபடலாம் என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மறைமுகமாக இந்தி திணிப்பு செய்யப்படுகிறது.

யுஜிசியின் புதிய திருத்தப்பட்ட வரைவறிக்கை குறித்து மற்ற மாநில முதல்வர்களிடம் ஆதரவு கேட்க வேண்டும். யுஜிசி தன்னிச்சையாக வெளியிட்ட வரைவை ஏற்க முடியாது. மக்கள் விரோத திட்டம் எதுவாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் தனித்தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

நயினார் நாகேந்திரன் (பாஜக):பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக யுஜிசி சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு கல்வியில் மாற்றம் வேண்டும். வரைவறிக்கையில் சில குறைகள் இருந்தால் அதை சொல்லி மாற்றம் செய்யலாம். குறைகளை எடுத்து சொல்லி முதல்வர் கடிதம் எழுதலாம். இவை இறுதியான நடவடிக்கை இல்லை; வரைவறிக்கை தான். எனவே, முதல்வரின் தனித் தீர்மானத்தை ஏற்க முடியாது; வெளிநடப்பு செய்கின்றோம்.

ஜி.கே மணி (பாமக): துணைவேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். முதல்வரின் தனித்தீர்மானம் மாநில அரசின் உரிமையை காக்கும் தீர்மானம். பல்கலைக்கழகங்களை பாதுகாக்கும் தீர்மானம். இந்த வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில கல்வி கொள்கையில் மத்திய அரசு தலையிடக் கூடாது. முதல்வர் தனித் தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.

ஆளுர் ஷானவாஸ் (விசிக), சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details