தருமபுரி:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" (Makkaludan Mudhalvar) திட்டத்தை நாளை (ஜூலை 11) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் கோவையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தருமபுரியில் இந்த திட்டமானது நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இதேபோல், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் முதலில் நகராட்சிகளில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளுக்கு துவங்கி வைக்க வருகிறார் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை உட்பட 13 அரசு துறைகள் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.