சென்னை: 2024 - 2025 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 ஆயிரத்து 500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3 ஆயிரத்து 500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைதளம் அல்லது முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.
திட்டம் சொல்வது என்ன?:சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து. அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
கடைப்பிடிப்பதற்கு தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இதுதொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தற்போது, குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது. அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.