தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியின் வெற்றி ரகசியம் இதுதான்.. தருமபுரியில் முதலமைச்சர் பேச்சு! - Makkaludan Mudhalvar - MAKKALUDAN MUDHALVAR

TN CM MK Stalin: ரூ.51 கோடி ரூபாய் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 3:35 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாகச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று பெயர் வைத்தோம். என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன்.

மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில் பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை கோரிக்கைகளாக எழுதி போட வைத்தோம். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன்.

உங்கள் முன்னால் அந்த பெட்டியைப் பூட்டி திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பாக கொண்டு வைத்தோம். உடனே எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள்? இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, இந்த பெட்டியை திறக்கப் போவதும் இல்லை என்ற இறுமாப்பில் கேலி, கிண்டல் செய்தார்கள்.

ஆனால், பொதுமக்களான நீங்கள் திமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து அந்த கேலி மனிதர்களை தோற்கடித்து, எங்களுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்தீர்கள். ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன்.

அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன் எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான் கடமை தொடங்குகிறது என்று நினைத்து உழைப்பைக் கொடுத்தோம். அதனால்தான் தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம்.

எப்படியெல்லாம் முறைப்படுத்தினோம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.

பொதுமக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களின் பார்வையில் இருந்து தவறிவிடக் கூடாது என்று தான் இது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மட்டுமில்லாமல் இணையதளம், அஞ்சல், சமூக வலைத்தளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தரப்படும் மனுக்கள் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் இதுபோல எல்லா மனுக்களும் ஒரே இடத்திற்கு சென்று சேருகிறது.

மக்களால் தரப்படும் எல்லா மனுக்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில், 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம்.

அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொன்னதை எல்லாம் நீங்கள் அரசுத் துறையின் அலுவலர்களிடம் சென்று மனுக்களை கொடுத்தது பற்றி ஆனால் அந்த நிலையை மாற்றி பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியமான
13 அரசுத் துறைகள், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களாகிய உங்களிடம் உங்கள் ஊரிலேயே மனுக்களைப் பெற்று பதிவு செய்து அதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நான் உத்தரவிட்டேன்.

அதன்படி உருவானதுதான் இந்த 'மக்களுடன் முதல்வர் திட்டம்' முதற்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம்.

இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்த திட்டம் மக்களுக்குப் பயனளிக்க தொடங்கிய காரணத்தால் தான் இப்போது ஊரக ஊராட்சிகளுக்கும் விரிவு செய்திருக்கிறோம்.

அதைத் தொடங்கி வைக்க தான் நான் இங்கே வந்திருக்கிறேன். கடந்த முறை தேர்தல் பரப்புரைக்காக நான் வந்தேன். இப்போது நீங்கள் கொடுத்த வெற்றிக்கு நன்றியாக உங்கள் மாவட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

புதிய அறிவிப்புகள்:

  • ரூ.51 கோடி ரூபாய் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில் மேம்பாலம் ரூ.38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • மோபிரிபட்டி – தொட்டம்பட்டியை இணைத்து அரூர் பேரூராட்சியானது அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
  • பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
  • சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.
  • தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.
  • பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால் தான் அவதூறுகள், பொய் பிரச்சாரங்கள் மூலமாக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை.

தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை. மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். திமுகவைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்! - Rs 4 Crore Seized Issue

ABOUT THE AUTHOR

...view details