சென்னை: இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, இக்கூட்டத்தில் சில முக்கியமான அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.
அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்புத் தணிக்கை நடத்தப்படும். இந்த தணிக்கையின் மூலம், பாதுகாப்பு ஏற்பாடுகளின் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து, மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழியவேண்டும்.
சென்னை மற்றும் பிற காவல் ஆணையர் அலுவலகங்களில் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்டங்களில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்தத் தணிக்கை குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர்களும் இதில் பங்கேற்பார்கள்.
மருத்துவமனைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவிக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மேலும், அவற்றின் காட்சிப்பதிவுகளை மத்தியக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும், குறைந்தது ஒரு மாத சேமிப்புத் திறன் கொண்ட போதிய எண்ணிக்கையிலான சிசிடிவிக்களை நிறுவி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.