சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், இணை செயலாளர் ஜீவன் அளித்துள்ள கடிதத்தில், "கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 40 மாதங்கள் கடந்துவிட்டது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆரம்பகால கட்டத்தில், சில துறைகளில் மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள் நியமனங்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும், புற்றீசல் போல பல்கிப் பெருகி விட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறான நியமனங்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தது என்றாலும், பெரும்பாலும் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஆலோசகர்களின் நியமனங்கள் எந்தவித வரைமுறையும் இன்றி செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல இவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.
69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியலமைப்பின் மூலமாக பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், இந்திய அரசியலமைப்பின் அங்கமான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசு பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவது என்பது ஏற்புடையதல்ல.
களத்தில் நின்று, மக்களோடு மக்களாக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பணியாளர்களின் உழைப்பினை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின் அறிவுரையின்படி, அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் போக்கு என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
மத்திய அரசு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இணைச் செயலாளர், துணைச் செயலாளர், இயக்குனர் நிலையில் 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டினை மறுதளித்து, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப முயற்சித்த போது, தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது என்பது திமுகவிற்கு எதிரான நடவடிக்கையாகும்.