சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வரும் 3ஆம் தேதி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றைத் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, தமிழகத்திற்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். இவர், மாநிலம் முழுவதும் பயணம் செய்து செலவினங்களைக் கண்காணிக்க உள்ளார்.
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. வரும் 3 ஆம் தேதி மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், வரும் 4ஆம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.