தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுப்பொலிவுடன் சென்னை வள்ளுவர் கோட்டம்! இறுதிகட்டத்தில் புனரமைப்பு பணிகள்! - VALLUVAR KOTTAM

சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அது பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் திறந்து வைக்கப்படும் என தெரிகிறது.

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள்
வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 4:59 PM IST

சென்னை: மெரினா, சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் சென்னைக்கு உள்ளன. அதில் வள்ளுவர் கோட்டத்திற்க்கும் தனி இடம் உண்டு. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவால் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கருங்கற்கள் பதிக்கப்பட்டு, 1330 திருக்குறள் செதுக்கப்பட்டு உள்ளன. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டடக்கலையுடன் வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், கல் தேர் 128 அடி உயரம் கொண்டதாகவும், 67 மீட்டர் நீளம் கொண்டதாகவும் உள்ளது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டு 49 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி வள்ளுவர் கோட்டம் சேதம் அடைந்து காணப்பட்டது.

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் (ETV Bharat Tamilnadu)

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.80 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவித்தார்.

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் (ETV Bharat Tamilnadu)

புதுப்பொலிவுக்கு மாறும் வள்ளுவர் கோட்டம்

அதன்படி, வள்ளுவர் கோட்டத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன மின்விளக்குகள், 1400 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அளவிற்கு மிகப்பெரிய குளிர்சாதன கூட்ட அரங்கு, மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவுக்கூடம், விற்பனைக் கூடம், மழை நீர் சேகரிப்பு வசதி, ஒலி ஒளி காட்சிக்கூடம், நீர் வீழ்ச்சி, பூங்காக்கள், குறள் மண்டபம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் (ETV Bharat Tamilnadu)

இதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணிகள் நிறைவடைந்து ஜனவரி தொடக்கத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படும் என ஏற்கெனவே பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். இருந்த போதும் வடக்கிழக்கு பருவமழை, அடுத்தடுத்த புயல்கள் காரணமாக பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது.

வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்புப் பணிகள் (ETV Bharat Tamilnadu)

இந்நிலையில் மீண்டும் தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்க்கு வள்ளுவர்கோட்டம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details