சென்னை:அம்பத்தூரில் உள்ள HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் குறித்து விசாரித்த அந்த நிறுவனத்தின் விசாகா குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக் கூடாது என பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை எதிர்த்து மார்க்கெட்டிங் அதிகாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை தொழிலாளர் நல நீதிமன்றம், அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, அந்த அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து HCL நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, HCL நிறுவனம் தரப்பில், "குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்கள் வேலை பார்க்கும் மேஜைகளுக்கு பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டு, கை குலுக்க கூறுவதாகவும், உடை அளவைக் கேட்டு தவறாக நடந்து கொண்டார். விசாகா குழு இயற்கை நீதி கொள்கையின்படி தான் விசாரித்தது என்றும், மூன்று பெண்களும் சம்பந்தப்பட்ட நபரின் செயல் மற்றும் வார்த்தைகள் தங்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விசாரணை குழு முன்பாக தெளிவாக கூறியுள்ளனர்" என்றும் வாதிடப்பட்டது.