சென்னை:சுற்றுலா தலங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இ-பாஸ் முறையை தொடர வேண்டும். சுற்றுலாவின் போது குப்பைகள் அதிகரிக்க காரணமாக இருக்கும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நீலகிரி மற்றும் திண்டுக்கல் (கொடைக்கானல்) மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவது சட்டவிரோதமானது என பஞ்சாயத்துக்கள் தீர்மானம் கொண்டு வர அரசு வலியுறுத்த வேண்டும். சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
உதகை, கொடைக்கானல்: இ-பாஸ் முறையை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு! - MADRAS HIGH COURT
சுற்றுலா தலங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இ-பாஸ் முறையை தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Feb 4, 2025, 7:57 PM IST
கடந்த 2019ம் ஆண்டு 27 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், அரசு அலுவலகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவு தான் பிறப்பிக்க முடியும். அதிகாரிகள் தான் அதை அமல்படுத்த முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.
மேலும், யானைகள் வழித்தடம் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுலா தலங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
மது பாட்டில்களை திரும்ப பெறாமல் இதுவரை 22 கோடி ரூபாய் உபரியாக உள்ளதாகவும், அதில் 15 கோடியே 94 லட்சம் ரூபாயை வங்கியில் தனி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் குறைகளை கேட்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் மாதம் முதல் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.