தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழ.நெடுமாறன் தொடர்ந்த பாஸ்போர்ட் வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - PAZHA NEDUMARAN

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழ.நெடுமாறன், சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பழ.நெடுமாறன், சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 6:59 PM IST

சென்னை:பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2022 ஆம் ஆண்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை அளித்த எதிர்மறை அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் நிராகரித்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என கூறினார். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை நிராகரிக்க முடியாது எனவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு மக்கள் இருக்குமாறு பழ.நெடுமாறன் பேசியது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, இலங்கை உடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினார். மேலும், விண்ணப்பதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் அந்த நாட்டுடன் இந்தியாவுக்கு உள்ள நட்புறவு பாதிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலர் கருதியதால் விண்ணப்பத்தை நிராகரித்தார் என கூறினார்.

மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கப்படும்? என்பது குறித்து பாஸ்போர்ட் அதிகாரி எந்த காரணத்தையும் விளக்கவில்லை எனக் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், 2 வாரங்களில் பாஸ்போர்ட் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ்.சவுந்தர், அவரது விளக்கத்தை பெற்ற பின், 3 வாரங்களில், பழ.நெடுமாறன் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details