தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்துறை செயலாளர் ஆஜராகாவிட்டால் "வாரண்ட்"... உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! - MADRAS HIGH COURT

குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

நீதிபதி வேல்முருகன், உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
நீதிபதி வேல்முருகன், உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 1:13 PM IST

சென்னை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம், நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சுந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்ததும், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தொடர்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்று நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலையில், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் காவல்துறையினர் அதை பின்பற்றுவதில்லை. காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா? என இன்று (ஜன 31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்நார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் பிற்பகல் 1.30மணிக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

வாரண்ட்டை எதிர்த்து அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதிகாரிகள் மக்களுக்கான கடமையை செய்யவே நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றும் அதிகாரிகளின் கடமையில் நீதிமன்றம் குறுக்கிடாது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு தரப்பில் மதியம் 4.30 மணிக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி 4.30 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details