சென்னை: 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், திமுக அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.
இந்த 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் விளையாட்டு தொடர்பாக என்னென்ன இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்(Olympic Academy)
விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்களை ஒலிம்பிக்கிற்கு தயார்ப்படுத்தும் விதமாகச் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பயிற்சி மையங்கள் இறகுப்பந்து (Badminton), கைப்பந்து (Hand Ball), கூடைப்பந்து (Basketball), தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமாக்கப் பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் பயனுள்ளதாக மெருகேற்றி, சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.