தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை பல்கலையில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் தவறில்லை: சபாநாயகர் அப்பாவு கருத்து! - TAMILTHAI VAZHTHU ISSUE

மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை. ஆனால் மாணவர்களுடன் அவர் செல்ஃபி எடுத்தது தவறு என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 3:05 PM IST

திருநெல்வேலி :திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மார்பக புற்றுநோயில் வென்றவர்களுக்கான வெற்றி விழா நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நெல்லை மாவட்டத்தில் செயல்படும் மண்டல புற்றுநோய் மையத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பில் புற்றுநோய்க்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. 1200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று மீண்டும் உள்ளனர்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

தென் மாவட்டங்களில் அதிகளவு கடற்கரை கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் காணப்படும் தாது மணல், கதிர் வீச்சும், கூடன்குளம் அணு உலையும் புற்றுநோய் பாதிப்புக்கான காரணமாக உள்ளது. கூடங்குளம் அணு உலை அணுக்கழிவுகளை அங்கேயே சேகரித்து வைத்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த அணுக்கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம்.

ஆளுநர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிப்பதற்கு முழு உரிமை உள்ளது. மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் என்பவர் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை.

இதையும் படிங்க :நெல்லை பல்கலை சிண்டிகேட் நியமனத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் - SFI ஆர்ப்பாட்டம்!

ஆனால் அவர் சிண்டிகேட் உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர்களுடன் செல்பி எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது போன்ற பல மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பது சட்டமன்ற விதி. ஆனால் ஆளுநர் சட்டமன்ற மரபு படியும், சட்ட விதிப்படியும் நடப்பதில்லை. அவர் ஆர்எஸ்எஸ் விதிப்படி நடக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கிடையாது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில், தூர்தர்ஷன் இயக்குனர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநரை திருப்திப்படுத்துவதற்காக தூர்தர்ஷன் இயக்குனர் தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளை விட்டுவிட்டு படித்திருக்கலாம்.

யாரையோ திருப்தி படுத்துவதற்காக என்னை குறிப்பிட்டு தவறான தகவலை பகிர்ந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர் எனக்கு மன்னிப்பு கடிதம் அளித்ததாக” தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details