சென்னை:இந்திய மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அத்துடன் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பின்னர் அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்புவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதன் பின் இதுகுறித்து சுமுக முடிவு காணப்படும் என இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்த போதிலும் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைக்குத் தீர்வின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.27) கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் (ND-TN-10-MM-772, IND-TN-10-MM-702 மற்றும் IND-TN-10-MM-291) மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஜனவரி 25ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.