சென்னை: திருவள்ளுவர் திருநாள் விழாவிற்கு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் காவிநிற உடை அணிந்திருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தை முதல் நாளை திருவள்ளுவர் தினமாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ஆளுநருக்கு தமிழ்நாடு பண்பாடும் தெரியாது. தமிழ்நாடு பழக்க வழக்கமும் தெரியாது. திருவள்ளுவரும் தெரியாது. ஆளுநர் தான் திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத்திரம் எல்லாம் அறிவித்து திருவள்ளுவருக்கும் காவி உடை அணிவித்து, இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்.