தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் உரிமம் இல்லாமல் தொழிற்சாலை இயக்கமா? ஊராட்சி மன்றத் தலைவர் கைதானதன் பின்னணி என்ன? - திருவள்ளூர் தொழிற்சாலை விவகாரம்

Ulundai Panchayat president Arrest: திருவள்ளூர் மாவட்டத்தில், தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த புகாரில், உளுந்தை ஊராட்சிமன்றத் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் தன் மீது பொய்யான புகாரை அளித்துள்ளது என ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Ulundai Grama Panchayat president Arrest
உளுந்தை ஊராட்சிமன்றத் தலைவர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 12:46 PM IST

திருவள்ளூரில் உரிமம் இல்லாமல் தொழிற்சாலை இயக்கமா? ஊராட்சி மன்றத் தலைவர் கைதானதன் பின்னணி என்ன?

திருவள்ளூர்: உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 'எக்விடாஸ்' என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், இதுவரை தொழிற்சாலைக்கான அனுமதியோ, கட்டடம் கட்டுவதற்கான உரிமமோ பெறவில்லை என்றும், தொழிற்சாலைக்கான வரியும் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷ், தான் பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வரியை செலுத்தக் கோரியும், கட்டட வரைபட அனுமதி பெற வேண்டும் என பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த ஜன.25ஆம் தேதி தொழிற்சாலையில் பணிபுரியும் மனிதவள மேலாண்மை அலுவலர் (HR) மற்றும் மேலாளர் ஆகியோர் ஊராட்சிமன்றத் தலைவரிடம் நேரில் பேசியுள்ளனர் என்றும், இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிற்சாலைக்கான வரி, கட்டடம் கட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழிற்சாலை கட்டுவதற்கான உரிமம் ஆகியவற்றை பெற வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் வலியுறுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அவர்கள் கட்டட வரைபட அனுமதி மற்றும் தொழிற்சாலை உரிமம் ஆகியவற்றை வாங்க மாட்டோம் என்று கூறி, ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர், சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், புகார் குறித்து விசாரிக்கவும் இல்லை எனவும் ஊராட்சிம ன்றத் தலைவர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழிற்சாலையில் பணிபுரியும் ஹெச்ஆர்-ஐ, ஊராட்சி மன்றத் தலைவர் அடித்ததாக நிர்வாகம் சார்பில் மப்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார், நேற்று (பிப்.26) காலை ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்து, தனி இடத்தில் வைத்து 12 மணி நேர விசாரணை நடத்தி உள்ளனர்.

பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பரிசோதனைக்காக ஊராட்சி மன்றத் தலைவரை அழைத்து வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் கூறியதாவது, "தொழிற்சாலையிடம் வரிப்பணம் செலுத்த அறிவுறுத்தினேன். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் வரிப்பணம் செலுத்த முடியாது என கூறினார்கள். மேலும், என் மீது தொழிற்சாலை நிர்வாகம் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், போலீசார் என்னை கைது செய்து அழைத்துச் செல்வதாகவும" ஊராட்சி மன்றத் தலைவர் கூறினார்.

இதனிடையே, ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2-இல் நீதிபதி ராதிகா முன் ஊராட்சி மன்றத் தலைவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் போலீசார் மீது தாக்குதல்: அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details