சென்னை:கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று, பள்ளிக் கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களிடம் ஈடிவி பாரத் தமிழ் நடத்திய சிறப்பு நேர்காணலில் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். அதில், தனது மகளை படிக்க வைக்க வேண்டாம் என்று கூறியவர்களுக்கு மத்தியில், 100 நாள் வேலை செய்து அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, அரசின் நிதியுதவியுடன் தனது மகள் மண்டி ஐஐடியில் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருப்பதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் வாய்ப்பு கிடைத்துள்ள மாணவி கௌசிகா கூறுகையில், “ திருவள்ளூர், ஆலத்தூர் என்ற சிறிய கிராமத்தில் 10 ஆம் வகுப்பு படித்து பள்ளியில் 2 வது இடம் பெற்றதால் அரசு மாதிரி பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜேஇஇ தேர்வில் ஆர்வம் வருவதற்கு ஆசிரியர்கள் காரணம். ரேஷன் அரசி சாப்பிட்டுக் கொண்டு இருந்த எங்களுக்கு, நல்ல சாப்பாடு மற்றும் தங்குவதற்கு இடவசதி அளித்து படித்தால் போதும் என்று கூறியது தமிழக அரசு.
எனது அம்மா 100 நாள் வேலைக்கு சென்று தான் எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தார். என்னை படிக்க வேண்டுமென எனது அம்மா ஊக்கப்படுத்தினார். ஊரில் உள்ளவர்கள் பெண்ணை ஏன் படிக்க வைக்கிறாய், திருமணம் செய்து கொடு என்றார்கள். ஆனால், எனது அம்மா அதையெல்லாம் கேட்கவில்லை. தன்னை படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார்.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் சேர்ந்துள்ளேன். திருவள்ளுர் மாவட்டத்தை தாண்டாத என்னை தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவின் எல்லையான மண்டியில் இமயமலை பார்ப்பதற்கான வாய்ப்புகளை கொடுத்து படிக்க வைத்த தமிழக அரசுக்கு நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கெளசிகாவின் தாய் மணிமேகலை கூறியதாவது, “தனது மகள் படிக்கச் செல்வது மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலமைச்சர் எனது மகளுக்கு லேப்டாப் கொடுத்துள்ளார். எனது குழந்தையை லட்சக்கணக்கில் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எனது மகளைப் பெற்றதற்கு பெருமைப்படுகிறேன. 100 நாள் வேலைக்கு சென்று நான் கஷ்டப்பட்டதை போல் எனது குழந்தை கஷ்டப்படக்கூடாது என்பதற்காக படிக்க வைத்தேன்” இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மண்டி ஐஐடியில் தேர்வான திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஸ்ரீஹரி கூறுகையில், “ஜேஇஇ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்வு செய்தனர். இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளியில் நன்றாக பயிற்சி அளித்தனர், தமிழ்நாடு அரசின் உதவியால் மண்டியில் உள்ள ஐஐடியில் படிக்க செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. மண்டியில் சென்று படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.