திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்றத் தனித் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், மொத்தமாக 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ள நிலையில், 14 லட்சத்து 23 ஆயிரத்து 285 வாக்காளர்கள், அதாவது 68.26 சதவீதம் பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் அபு இம்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பார்வையிட்டார். அதன்பின், அந்த அறைக்கு சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.