திருவள்ளூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொறுத்தவரை, 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தங்கள் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரபுசங்கர் நேற்று (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 70 ஆயிரத்து 279, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் எண்ணிக்கை 729 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3,687 வாக்குச்சாவடிகளும், 1,301 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.