திருவள்ளூர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் கடந்த ஏப்.16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆவடி சரஸ்வதி நகரைச் சேர்ந்த புவனேஷ் ராம் (27) என்பவர், தமிழகத்தில் முதல் மாணவராகவும், இந்திய அளவில் 41வது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனைப் பாராட்டும் விதமாக, நேற்று முன்தினம்(ஏப்.20) இவர் பயின்ற தனியார் ஐ.ஏ.எஸ் நிறுவனம் சார்பில், புவனேஷ் ராம் மற்றும் இந்திய அளவில் 314வது இடத்தைப் பிடித்த மயிலாப்பூரைச் சேர்ந்த விக்னேஷ், 347வது இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியைச் சேர்ந்த அரவிந்த் குமரன் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடந்தது.
இந்தப் பாராட்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.