திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர பல்லடம் அதிமுக எம்எல்ஏ, எம்.எஸ்.எம். ஆனந்தன் சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம்பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை அடையாளம் தெரியாத கும்பல் கடந்த நவ.28ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் 14 தனிப்படையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தனிப்படை அமைத்து தீவிர விசாரணை:இந்த விசாரணையில், குடும்ப பிரச்சினையோ, முன்விரோதமோ கொலைக்கான காரணம் இல்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் எந்த சிசிடிவி கேமராவிலாவது பதிவாகி இருக்கலாம் என்பதால் காங்கயம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், நகைக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை என சகலத்தையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல், கொலை நடந்த நாளில் அந்த பகுதியில் உலவியவர்களின் செல்போன் விபரங்கள் குறித்தும், தகவல்களை சேகரித்தனர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்தை சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை அலசி ஆராய்ந்து விட்டனர். 800 பேருக்கும் மேல் விசாரித்து ஆவணப்படுத்தியும் விட்டனர்.