திருப்பூர்:தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) அவரது முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 'தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதனால் குறு, சிறு தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரிடையே பட்ஜெட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகளவிலிருந்தது.
பல்வேறு நலத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் குறு சிறு தொழிலாளர்கள், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாகத் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஆறு மாத காலமாக தொழில்துறையினர் மிகவும் நலிவடைந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இருந்து வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு அதற்கு இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. எனினும் பட்ஜெட்டில் சலுகை தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள பட்ஜெட் தொழில்துறையினருக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்திருக்கின்றது.