தமிழ்நாடு

tamil nadu

"இறக்கும் தருவாயில் 20 பேரை காப்பாற்றிய என் மகன்"- தந்தை பெருமிதம்! - Driver saved children and died

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 8:02 PM IST

Updated : Jul 26, 2024, 8:11 PM IST

Tiruppur Driver Died Saving Children: திருப்பூர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் சேமலையப்பன் இறக்கும் தருவாயிலும் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, மாணவர்கள் உயிரைக் காப்பாற்றியதை பாராட்டி, அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சேமலையப்பன்  குடும்பத்திற்கு காசோலை வழங்கிய அமைச்சர் சாமிநாதன்
சேமலையப்பன் குடும்பத்திற்கு காசோலை வழங்கிய அமைச்சர் சாமிநாதன் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம், சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (48). இவர் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தினந்தோறும் காலை வீடுகளில் இருந்து மாணவர்களை பள்ளிக்கும், மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கும் வாகனத்தில் அழைத்துச் செல்வது இவரது வழக்கமான பணி.

சேமலையப்பன் தந்தை சுப்பன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 24) மாலையில் பள்ளி முடிந்த பிறகு, 25 மாணவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீடுகளில் விட புறப்பட்டார். ஐந்து மாணவர்களை இறக்கி விட்ட நிலையில், சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பள்ளியிலிருந்து சென்ற நிலையில் திடீரென நெஞ்சுவலி காரணமாக அவதி அடைந்த சேமலையப்பன், உடனடியாக வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு நெஞ்சு வலியால் துடித்து உயிரிழந்தார்.

இவ்வாறு நெஞ்சு வலி ஏற்பட்டவுடன், துரிதமாக செயல்பட்டு மாணவர்களின் உயிரைக் காக்கும் விதமாக சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன இருக்கையிலேயே அமர்ந்து உயிரிழந்த சம்பவம் வெள்ளக்கோவில் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓட்டுனர் சேமலையப்பன் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காங்கேயம் சத்யா நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, ஐந்து லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினர்.

இதில் சேமலையப்பன் மகன்களான சந்துரு (21), வசந்த் (18) ஆகியோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் தந்தை சுப்பனுக்கு 1 லட்சம் என பிரித்து முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளியின் சார்பில் மாணவர்களைக் காப்பாற்றி உயிர்விட்ட சேமலையப்பனுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவரின் உருவப் படத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து சேமலையப்பனின் தந்தை சுப்பன் கூறுகையில், “எனது மகன் பள்ளிக் குழந்தைகளை வேனில் ஏற்றிக் கொண்டு வீட்டில் விடுவதற்காக வந்து கொண்டிருக்கும்போது மிகுந்த நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் தனது உயிரை காப்பதைவிட, வேனில் இருக்கும் குழந்தைகளின் உயிரை பெரிதாக கருதிய சேமலையப்பன், ஓரத்தில் வேனை நிறுத்திவிட்டு வலியால் அவதிப்பட்டு இறந்துவிட்டான். இதுகுறித்து ஆட்சியர், முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து காசோலையும் வழங்கினர். மேலும், எனது மகன் இறக்கும் தருணத்திலும் 20 பேரின் உயிரைக் காக்கும் எண்ணத்தில் செயல்பட்டது பெருமையாக இருக்கிறது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Last Updated : Jul 26, 2024, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details