திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வேலூர் மண்டல வனப் பாதுகாப்பு படை அலுவலராக இருப்பவர் மூர்த்தி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர், பல இடங்களில் லஞ்சம் பெற்று வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்து மரங்களை வெட்டிச் செல்வதாக பல புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில், வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி, மரங்களை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெறும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், "என்னப்பா 100 ரூபாய் கொடுத்தா எப்படி" எனக் கூறியுள்ளார். மேலும், சக அதிகாரிகளிடம் “நான் மட்டும்தான் பேசணுமா.. வாயில் என்ன கொழுக்கட்டை வச்சிருக்கீங்கள்ளா.. 500 கொடுத்தாலும் வாங்கிரு..” என்று கூறுகிறார். மேலும், அவருடன் பணியாற்றும் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய அதிகாரிகள் உள்ளனர்.