திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பாரதி நகரில் வைத்து முத்து கிருஷ்ணன் (21) என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (21) என்பவரை நேற்று (நவம்பர்.26) திங்கட்கிழமை மாலை சுத்தமல்லி பாரதி நகரில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர்,"என்று கூறினர்.
இந்த நிலையில் கொலையுண்ட முத்து கிருஷ்ணனின் உடலை, எடுக்க விடாமல் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொலை குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை சாலைமறியலை கைவிடப்போவதில்லை என முததுக்கிருஷ்ணனின் உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முத்து கிருஷ்ணனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.