திருநெல்வேலி: தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை திருநெல்வேலி மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது. இதனை கொண்டாடும் விதமாகவும், இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்திடவும், இளம் தலைமுறையினரிடையே இலக்கியம், புத்தகம், கலைகள் குறித்து ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டு தோறும் இலக்கிய திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எழுத்தாளர் நாறும்பூநாதன் உடன் இருந்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "2024இல் இரண்டாவது பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா வருகிற 30 (நாளை) மற்றும் 31 ஆகிய இரண்டு தினங்கள் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் மற்றும் பிபிஎல் மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த இலக்கிய திருவிழாவில் தென் மாவட்டங்களின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் தங்களின் இலக்கிய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பங்கேற்கின்றனர்.
மேலும், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விவாத மேடை, இலக்கிய வினாடி வினா போட்டிகள், தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு பேச்சு போட்டிகள் என இலக்கியம் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏழாவது பொருநை புத்தகத் திருவிழா பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடக்கிறது.