திருநெல்வேலி:2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றன்ர்.
அந்தவகையில் நெல்லையில் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "அனைவரும் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். பல இடங்களில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்கின்றனர். பின்னர் விடுவித்து விடுகின்றனர். மேலும், காவல்துறையாலும் பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
யாரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்ய பயப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் கொடுத்துக் கொண்டே தான் இருந்தார்கள். இது குறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மகாபாரத போரில் எப்படி வெற்றி கிடைத்ததோ, அதேபோல் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க:"இந்தியா வெற்றி பெறும்" வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!