திருநெல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளரை மாற்றி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜான்சி ராணி நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் திமுக பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விமாகக் கொண்டவர்.
அதேநேரம், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து, சிம்லா முத்துச்சோழன் திமுக சார்பில் போட்டியிட்டார். திமுகவில் தீவிரமாக பணியாற்றிய சிம்லா முத்துச்சோழன், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் அதிமுகவில் இணைந்தார்.
எனவே, தங்கள் கட்சித் தலைவியை எதிர்த்து போட்டியிட்ட ஒருவருக்கு, கட்சியில் சேர்ந்த சில நாட்களில் தேர்தலில் போட்டியிட எப்படி வாய்ப்பு வழங்கலாம் என சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, நெல்லை தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வெளியூர்காரர் என்பதால் தொகுதிக்கு எந்த ஒரு அறிமுகமும் இல்லை, மறுபுறம் தங்கள் கட்சித் தலைவியை எதிர்த்து போட்டியிட்டவர் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், சிம்லா முத்துச்சோழனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டிதாக கூறப்பட்டது. எனவே, நெல்லை அதிமுக வேட்பாளர் எந்த நேரமும் மாற்றப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்ட சூழ்நிலையில், இன்று அதிரடியாக நெல்லை தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.