திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் கணேஷ் என்பவரது மூன்று வயது மகன் இவான். இந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக சிறிய எல்இடி பல்பை விழுங்கியுள்ளார். அந்த எல்இடி பல்ப் சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனின் மூச்சு குழாயில் சிக்கிய எல்இடி பல்பை எடுக்க முடியாத நிலையில், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுன்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலையில், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மூச்சு குழாயில் சிக்கி இருந்த எல்இடி பல்பை அகற்றியுள்ளனர்.
சிறுவனின் பெற்றோர்கள் நன்றி:
இதுகுறித்து பேசிய சிறுவனின் பெற்றோர், “எனது மகன் பல்பை தவறுதலாக விழுங்கிய நிலையில் செய்வதறியாமல் இருந்தோம். இதுவரை அரசு மருத்துவமனையில் நாங்கள் சிகிச்சை பெற்றதில்லை. ஆனால், அவசர நிலையில் வேறு வழியின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மகனை தூக்கிச் சென்றோம்.
அங்கு என் மகனின் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை எனக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைத்து மருத்துவர்களும் மிக சிறந்த முறையில் என் மகனுக்கு சிகிச்சை அளித்தனர். எனது மகன் விழுங்கிய பல்பை அகற்றினர். அனைத்து மருத்துவர்களுக்கும் மிக நன்றி. நான் அரசு மருத்துவமனையில் இவ்வளவு நன்றாக சிகிச்சை அளிப்பார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை” என தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்:
இதுகுறித்து திருநெல்வேலி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள் செய்தி குறிப்பில், “ மூன்று வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய சிறு பல்பை திருநெல்வேலி காது, மூக்கு தொண்டை பிரிவில் உள்ள மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.