நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அணை, அருவிகள் போன்ற சுற்றுலாத் தளங்கள் அதிகளவு உள்ளன. அதில் மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலா தலமான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி நாலு மூக்கு, உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை கடுமையாக சேதமானது. இதனால் மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் கால வரையறையின்றி தடை விதித்திருந்தனர். சாலை மோசமானதால் பேருந்து சேவையும் முடங்கியது.
தொடர்ந்து சாலை தற்காலிகமாக சீரமைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று (பிப்.16) முதல் 4 சக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அனுமதி வழங்கியுள்ளார்.