தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையை புரட்டிப் போட்ட கனமழை: வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்பு! - TIRUNELVELI RAIN UPDATE

நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை நெருங்கியதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெஞ்சளவு வெள்ளநீரில் பெண் செல்லும் காட்சி
நெஞ்சளவு வெள்ளநீரில் பெண் செல்லும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

திருநெல்வேலி:தொடர்ந்துஇரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடனாநதி, ராமநதி அணைகள் முழு கொள்ளளவு எட்டிய நிலையில், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் அடியை நெருங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, மன்னர் வளைகுடா - இலங்கை கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை:

ராமநதி அணையில் கொட்டும் தண்ணீர் (ETV Bharat Tamil Nadu)

நேற்று முன்தினம் (டிசமபர் 12) இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில், நேற்று பகல் சற்று குறைந்து காணப்பட்டது. பின்னர், மாலை மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான ராமநதி அணை மற்றும் கடனாநதி அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

உச்ச நீர்மட்டம் 85 அடி கொண்ட கடனாநதி அணைக்கு சுமார் 20 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து காணப்படும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வரக்கூடிய நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

அதேபோல், உச்சநீர் மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணையிலிருந்து சுமார் 2,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தமாக இரு அணைகளில் இருந்து சுமார் 22 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை:

குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் (ETV Bharat Tamil Nadu)

கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆழ்வார்குறிச்சி வழியாக நெல்லை மாவட்டம் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. ஏற்கனவே, தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்லும் நிலையில், தற்போது கூடுதலாக 22 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடந்த ஆண்டு பெய்த மழையில் தரைமட்டமான வீடு! “இன்று வரை நிவாரணம் இல்லை” தச்சநல்லூர் பகுதி மக்கள் வேதனை!

நெஞ்சளவு தண்ணீர்:

வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள காட்சி (ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையில், கடனாநதி அணையில் திறக்கப்படும் உபரிநீரால் அணை அருகே உள்ள சம்பாங்குளம் பகுதியில் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. அதனால், மார்பளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அருகே உள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், சிலர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், சில பெண்கள் நெஞ்சளவு வெள்ளநீரில், ஆபத்தான முறையில் செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

உருவானது வளிமண்டல சுழற்சி:

தற்போது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details