திருநெல்வேலி: குமரிக் கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம், திசையன்விளை, பாபநாசம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.
முக்கியமாக, திசையன்விளை பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பலத்த காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். அதிகபட்சமாக பாபநாசத்தில் 27 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மிதமான மழை நீடித்து வருகிறது.
அதேபோல், நெல்லை மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தலமான மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி தொடர் மழையால் அழகின் உச்சத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மறு உத்தரவு வரும் வரை நீர்நிலைகளுக்குள் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.