திருநெல்வேலி: தசரா எனப்படும் நவராத்திரி என்பது இந்தியாவில் இந்து மதத்தைன் பின்பற்றும் மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையானது 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் மிக முக்கிய அம்சமாக வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படுவது வழக்கம். ஒன்பது நாட்களும் துர்க்கையின் 9 வடிவங்களையும் ஒவ்வொரு நாளும் வழிபடுவார்கள்.
அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கியது. அக்டோபர் 11ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி அல்லது தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரியின் கடைசி நாளில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
குறிப்பாக, இந்தியாவில் கர்நாடக மாநில மைசூரில் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறும். வழக்கம் போல் இந்த ஆண்டு பொதுமக்கள் விரதம் இருந்து அம்மனுக்கு வேடம் அணிந்தும் தசரா திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
கொலு என்றால் அழகு என்று அர்த்தம். இந்த அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய கொலுவில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். வீட்டில் கொலு வைப்பது எதற்காக? கொலுவில் பலவிதமான பொம்மைகள் வைக்கப்படுகிறது. அதற்கான ஆன்மீக காரணம் என்ன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? இது குறித்து, ஈடிவி பாரத் தமிழுக்கு நெல்லையை சேர்ந்த ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசுப்பிரமணியன் கூறுவதை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நவராத்திரி திருவிழாக்களில் வீட்டில் பொதுமக்கள் கொலு வைக்க வேண்டும். கொலு வைக்க முடியாதவர்கள் வீட்டில் அகண்ட தீபம் (அணையாத தீபம்) ஏற்றலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில் சாமி படங்களுக்கு முன்பு விளக்கு ஏற்றலாம்.
இதையும் படிங்க:வீடுகளை அலங்கரிக்க தயாராக இருக்கும் அதியமான்கோட்டை கொலு பொம்மைகள்.. நவராத்திரியை கொண்டாட ரெடியா?
எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?:வீட்டில் கொலு வைத்தவர்கள் 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். சுண்டல், சர்க்கரைப் பெங்கல், தாமரை பூ வைத்து வழிபாடு செய்யலாம். நவராத்திரி தினங்களில் அம்மன் குழந்தைகள் ரூபத்தில் நமது இல்லத்திற்கு வருவார். எனவே, வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
வீட்டில் செய்யக்கூடாத செயல்கள்:அம்மன் ஊசி முனையின் நுனியில் இருந்து தவம் இருக்கும் நாள் நவராத்திரி. எனவே, ஊசித் தைக்கக்கூடிய செயல்களை அன்றைய தினங்களில் செய்யக்கூடாது. பழைய துணிகளை வீட்டில் போடக்கூடாது. பழைய சாப்பாடு சாப்பிடக்கூடாது. கடன் வாங்கக்கூடாது. நகைகளை அடகு வைக்கக்கூடாது. அதே போல் வீட்டில் தூசி தட்டுவது, ஒட்டடை அடிப்பது போன்ற செயல்களை தவிர்த்தல் வேண்டும்.
வீட்டில் என்ன செய்யலாம்: மண் சார்ந்த செயல்களான மரம் நடுவது, வீடு கட்டும் பணிகளை தொடங்குவது, தண்ணீர் போர் போடுவது போன்றவற்றை செய்யலாம். 9 நாட்களிலும் ஏன் நாம் காப்பு கட்டி, அம்மன் வேடம் அணிவது நமக்கு இருக்கும் தோஷத்தை நீக்கும். உடல் ஆரோக்கியத்தை காக்கும்.
தவக்கோலத்தில் அம்மன் வழிபாடு: சுப நிகழ்ச்சிகளை நவராத்திரி தினங்களில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இந்த நாட்களில் அம்மன் முழுவதும் தவக்கோலத்தில் இருப்பார். அம்மன் தவக்கோலத்தில் இருக்கும் கோயிலில் சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும். தமிழகத்தில் சங்கரன்கோவில் கோமதி அம்மன் தவக்கோலத்தில் இருக்கிறார்.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன், சென்னை திருவொற்றியூரில் வடிவுடையம்மன் ஆகிய கோயில்களில் அம்மன் தவக்கோலத்தில் இருக்கின்றார். எனவே, அதுபோன்ற கோயில்களில் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். இதில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசுப்பிரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) ராகு கால சிறப்பு:நவராத்திரி தினங்களில் ராகு காலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராகு காலத்தில் தான் துர்க்கை அம்மன் இருக்கின்றார். எனவே, ராகு காலம் இந்த 9 நாட்களும் மிக வீரியமாக இருக்கும். எனவே, சுப நிகழ்ச்சிகளை ராகு காலத்தில் தவிர்க்க வேண்டும். நாம் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் ராகு காலத்தில் நவராத்திரியில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம்.
நவராத்திரி கொலு முறை: 9 படிகளில் கொலு வைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து படிகளாவது வைக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும், ஒரு உயிரினங்களை குறிக்கிறது. சிறிய வீடாக இருந்தால் 5 படிகளில் வைக்கலாம். குறிப்பாக, கொலுவில் கும்பம் வைத்து வழிபட வேண்டும். கும்பத்தில் கங்கையின் அம்சமான நீரை வைக்கலாம். அன்னபூரணியின் அம்சமான அரசியை வைக்கலாம்.
கொலுவில் சாதி, மதத்தை தவிர்த்து அனைத்து விதமான தெய்வங்களை வைத்து வழிபாடு செய்யலாம். கொலு என்றாலே அழகு. எந்த விதமான சிலைகளையும், பொம்மைகளையும் வைக்கலாம். குறிப்பாக மண் சார்ந்த சிலைகள் பொம்மைகளை வைப்பது மிகவும் சிறந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்