திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 2 வயது இரட்டை குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளுடன் தாய் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.11) காலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரட்டை குழந்தைகள் அங்கு இருந்த கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டதாகவும், அதனை அவரது தாயார் கவனிக்காதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லா போன்டன் மருத்துவ நடைமுறை; அசத்தும் அப்போலோ! -
இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகள் 2 பேரையும் தாய் தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக குழந்தைகள் 2 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அங்குள்ள குழந்தைகள் வார்டில் இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் இரண்டு பேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளின் தாய் தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரும் அண்மையில் இறந்துள்ளார். இந்நிலையில் தற்போது குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் பல கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.