தூத்துக்குடி:திருச்செந்தூர் யானை தெய்வானை தாக்கி பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இதண்டு மாதங்கள் கழித்து தற்போது யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். இக்கோயிலில், 26 வயதான தெய்வானை என்ற யானை கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கோயில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இரண்டும் பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கோயில் யானை தனிமைப்படுத்தப்பட்டு வனத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
மருத்துவக் கண்காணிப்பில் இருந்த தெய்வானை யானை, 10 நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 29 ஆம் தேதிவெளியேஅழைத்து வரப்பட்டது.இதற்காக, முன்னதாக கோயில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோயில் யானை தெய்வானைக்கு தெளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“ம்ம்.. சாப்பிட்டேன்.. தண்ணீ குடிச்சுட்டேன்.. தலையை அசைத்து மருத்துவருக்கு பதிலளித்த திருச்செந்தூர் தெய்வானை யானை!
அதனைத்தொடர்ந்து, யானை ஒவ்வொரு நாள் காலையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு ஆசி வழங்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 21) செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் யானை நடைபயிற்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதியில் இருந்த பக்தர்கள் தெய்வானையை கண்டு அதற்கு அருகே சென்று ரசித்துள்ளனர்.
பக்தர்களுக்கு ஆசி வழங்கிய திருச்செந்தூர் தெய்வானை யானை (ETV Bharat Tamil Nadu) இதில், தெய்வானை யானை அங்கிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த அனைவரும் தேய்வானை யானையிடம் ஆசி பெற்றுள்ளனர். தெய்வானை யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.