வேலூர்: வேலூர் மாவட்டதில் நடந்த இச்சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் படி, 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 17ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.
அப்போது, அருகே உள்ள கல்குவாரியில் இருந்து மகளின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக கல்குவாரிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு, அவரது மகளான 13 வயது சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவ நடந்த இடம் வெறொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் அங்கும் புகாரை வாங்காமல் மீண்டும் முன்பு புகார் கொடுத்த அதே காவல் நிலையத்திற்கு போலீசில் புகார் செய்ய அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், போலீசார் புகாரை வாங்க மறுத்து அலைகழித்ததால் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து முதன்முதலில் சிறுமியின் தந்தை புகார் அளித்த அதே காவல் நிலையத்திலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.