கரூர்:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணகுமார் (50). தீவிர முருக பக்தரான இவர், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) குடும்பத்தினருடன் காரில் சென்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். இன்று(ஜூலை 22) அதிகாலை 3:30 மணியளவில் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை அமைந்துள்ள அரவக்குறிச்சி அக்ஷயா ஓட்டல் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இடது புறத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கிருஷ்ணகுமார்(50) கிருஷ்ண குமாரின் மகள் வருணா(10) மாமியார் இந்திரா (67) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கோரவிபத்தில் கிருஷ்ணகுமாரின் மனைவி மோகனா(40) மகன் சுதர்சன்(15) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.