சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், ஏறத்தாழ 180க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும், மற்றவர்கள் சேலம், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 54 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். 148 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்திற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களான பிரவின் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் அருந்தியதால், இரு நாட்களாக வயிற்று எரிச்சலால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுள்ளனர். அவ்வப்போது மெடிக்கலில் மாத்திரைகள் வாங்கி போட்டும் சரியாகவில்லை. மேலும், இவர்களின் உடல்நிலை மோசமானதால் முண்டியப்பாக்கம் பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.