சென்னை:சென்னை, தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உதயா. இவர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில், உதயா தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதயாவை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பின்னர், வாக்குவாதம் தகராறாக மாற, இதில் ஆத்திரமடைந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயாவை வெட்டி உள்ளனர். அப்போது, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குச் சென்ற உதயாவை விரட்டி, சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக உதயாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி உதயா இன்று(மே.13) அதிகாலை உயிரிழந்தார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் 3 பேரும், சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசீலியிடம் சரணடைந்தனர். பின்னர் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்.